Tuesday, December 28, 2010

கமலுக்குத் தேவை இஞ்சின் ஓவர்ஹாலிங்!


முதலில் கமலுக்கு வாழ்த்து சொல்லவேண்டும்! கதை, திரைக்கதை, வசனம், பாடலாசிரியர், நடிகர் போன்ற துறைகளில் மறைமுகமாக ஈடுபட்டிருந்தாலும், இப்போது வெளிப்படையாக செய்ததில், டி. ராஜேந்தருக்கு இணையாக வருகிறார்! அதனால்தான் வாழ்த்து என்று முதலிலேயே போட்டுவிட்டேன்!

”மன்மதன் அம்பு” படத்தில் கதை என்று ஒரு பெரிய விஷயமெல்லாம் இல்லை! கதை என்பது பல வகை இருந்தாலும் பார்வையாளனுக்கு யூகிக்க விட்டுவிட்டு அவனுக்கு சர்ப்ரைஸாக திருப்பம் தருவது ஒரு வகை! அப்படி இல்லையென்றால், யூகிக்க முடிந்ததை சுவாரஸ்யமாக தருவது இன்னொரு வகை என்றும் சொல்லலாம்! ஆனால், “மன்மதன் அம்பு” இரண்டும் இல்லை! கமலுக்கு கதை என்று தோன்றிய ஒன்றை கோடிக்கணக்கில் காண்பித்திருப்பது! இதை அபாண்டம் என்றும் சொல்லலாம்! இல்லை “வதை” என்றும் சொல்லலாம்!

மன்(னார்)னும் மதனும் அம்புவை நோக்கிப் பயணிப்பதுதான் கதை! ஆனால், கதை கமலாச்சே! அதை தன் மேல் போகும்படியாக செய்திருக்கிறார்!விடுங்கள்! அவர் தன்னை narcist என்று காண்பித்து ரொம்ப நாள் ஆகிவிட்டது! அதனால் அதையும் மன்னிக்கலாம்! விவாகரத்து ஆன சங்கீதாவை பணப்பித்தாசை கொண்ட bitch என்று காண்பித்தைதையும் மன்னித்துவிடலாம் (கமலின் முன்னள் மனைவிகளையும், பிரகாஷ்ராஜின் முன்னாள் மனைவியையும் நீங்கள் கற்பனை செய்துகொண்டால் அதற்கு நான் காரணமல்ல)! மதன் அநியாயத்திற்கு அம்பு மேல் சந்தேகப்படுவதையும் மன்னித்துவிடலாம்! அட, அம்பு மதனை விட்டுவிட்டு மன்னாரை காதலிப்பதையும் (வேறு வழியில்லாமல்) மன்னித்துவிடலாம்! ஆனால், தன்னை இள வயதினன் என்று காண்பிக்க, தன் கன்னத்து சுருக்கங்களை மறைக்க, கமல் ஐந்து நாள் தாடியுடன் அலைவதைத்தான் மன்னிக்கவே முடியாது!

அது என்ன சார், தன்னை 40 வயதான் ஆள் போல காண்பித்தால் ரசிகர்கள் பார்க்கமாட்டர்களா? இல்லை, தனக்கு இன்னும் இளைஞன் இமேஜ் இருக்கிறது என்று கமலே முடிவு செய்துவிட்டாரா? கண்றாவி! மிஸ்டர் கமல், உங்களுக்கு வயதாகிவிட்டது! நீங்கள் மனதால் இளைஞனாகஇருந்தாலும் உங்களூக்கு வயது 56! அதை யாராலும் மறைக்க முடியாது! 40 வயது கேரக்டரில் நடிக்கும்போது அந்த வயதான மேக்கப்பையே போட்டுக்கலாம்! தப்பில்லை! வெளியே வாங்க!

அடுத்த இன்னொரு விஷயம், “லைவ் ஆடியோ”! இதை எப்போது உபயோகப்படுத்தலாம் என்பதை தயவு செய்து எங்கேயாவது படித்துவிட்டோ அல்லது ஆராய்ச்சி செய்துவிட்டோ implement செய்யுங்கள்! ”மன்மதன் அம்பு” படத்தில் பல இடங்களில் லைவ் ஆடியோ உபயோகப்படுத்தியிருப்பது, நம்மூர் கிராமத்தான் கையில் டாய்லெட் பேப்பரை கொடுத்து “போய் விட்டு வா” என்று சொன்னமாதிரி! எதை எங்கு உபயோகபடுத்துவது என்பது அவனுக்குத் தெரியாது! எல்லா கேரகடர்களும் சொல்லிவைத்த மாதிரியே வேகமாக பேசுகிறார்கள்! ஒண்ணுமே புரியவில்லை! இதில் பல இடங்களில் ஆங்கில கலப்பு உள்ள வசனங்கள் வேறு! நான் பார்த்த தியேட்டரில் “சப் டைட்டில்” போட்டதால் தப்பித்தேன்! Thanks to sub-titles, கமலின் ட்ரேட் மார்க் கண் கலங்குவதையும், திரிஷாவின் “அய்யோடி” குளோஸ்-அப்பையும் தவிர்க்க முடிந்தது!

கடைசி 20 நிமிடங்கள் போனது தெரியவில்லை! அத்தனை வேகமா என்று கேட்காதீர்கள்! கதாபாத்திரங்கள் பேசும் வேகத்தில், அவர்கள் சொன்னதை புரிந்துகொள்ள முயற்சி செய்ததில் கடைசி 20 நிமிடங்கள் போனதே தெரியவில்லை! இதுவும் கமலின் திரைக்கதைக்கு ஒரு சான்று! வசனத்தால் படத்தைச் சொல்லி நகர்த்தும் கலையை இவர் அட்லீஸ்ட் க்ரேஸி மோகனிடம் கற்றுக்கொள்ளலாம்! அது சரி, காட்சிகளால் நகர்த்துவதில் கமல் கெட்டிக்காரர் என்று சொல்லலாம் என்று பார்த்தால் “ஹே ராமும்”, “ஆளவந்தானும்” under the belt-இல் வந்து குத்துகிறதே?

ஓ, கடைசியாக அந்த “காமம், கழிவு” கவிதை! அந்தக் கண்றாவி கவிதையை (!!!) தடை செய்துவிட்டார்கள் என்று நினைத்தேன்! ஆனால்,நான் பார்த்த தியேட்டரில் (டல்லாஸ்) அந்தக் கவிதையை முழுதும் போட்டுக் காண்பித்துவிட்டார்கள்! இது என்ன தகிடுதத்தம் என்று தெரியவில்லை! உள்நாட்டில் ஒரு சென்ஸார், வெளிநாட்டுக்கு ஒரு சென்ஸார் போர்டு போல?
இந்தக் கவிதையை கமலின் கவித்துவத்துக்கு ஒரு சாம்பிள் என்று எடுத்துக்கொண்டால், கடவுளே, கண்ட கழிசடையெல்லாம் கவிதை எழுதவந்துவிடலாம் போலிருக்கிறதே?

சரி, இத்தனை நெகட்டிவ் விஷயங்களைத்தான் பார்த்தாயா, பாஸிட்டிவ் விஷயங்களே கண்ணுக்குத் தெரியவில்லையா என்று கேட்பது புரிகிறது!படத்தில் காமிரா கண்ணை உறுத்தாமல் இருக்கிறது! அதுவும் கடைசி காட்சியில் கப்பலின் ஒரு பக்கத்தில் திரிஷா-கமலை கட் செய்யாமல்,அப்படியே ஹெலிகாப்டரில் பறந்து இன்னொரு பக்கம் மாதவன் - சங்கீதாவை pan செய்தபடியே லாங் ஷாட்டில் முடிப்பது தரமான ஒன்று! இன்னொரு நல்ல விஷயம், D.S.P.யின் இசை! “ஹூ இஸ் த ஹீரோ” பாட்டும் “நீல வானம்” பாட்டும் நெஞ்சை அள்ளுகின்றன! அதிலும், “நீல வானம்” பாட்டில் “ஃபிளாஷ்பேக்கை” “ரிவர்ஸ் ஷாட்டிலேயே” காட்டுவது புதுமையான ஒன்று! உறுத்தாமலும் இருக்கிறது! மாதவன் & சங்கீதாவின் பர்ஃபார்மென்ஸ் ரசிக்கும்படியாக இருந்தது!

2004-இல் விருமாண்டி படம் வெளிவரும்போது, அந்தப் படத்தின் வெளியீட்டு விழாவில் டைரக்டர் கே. பாலசந்தர் “கமலுக்குத் தேவை ஒருஸ்பீட் ப்ரேக்கர்” என்று சொல்லியிருந்தார்! இப்போது எனக்குத் தோன்றுவது, “கமலுக்குத் தேவை இஞ்சின் ஓவர் ஹாலிங்”! முடிந்தால் இஞ்சினையே மாற்றுங்கள் கமல்!

Monday, October 4, 2010

எந்திரன் - தந்திரன் - ஒரு விமர்சனம்!




முதலில் தந்திரன் விமர்சனம் பார்ப்போம்! ஒரு ஊரில் ஒரு ரோபாட்
இருந்ததாம்! அதற்குப் பெயர் “ஷிட்டி” என்று வெச்சுக்குவோம்! அந்த ஒரு ரோபாட் யார் யார்கிட்டேயோ அசிஸ்டெண்ட்டாகவெல்லாம் இருந்து கடைசியில் ஒரு மீசைக்காரர் ஒரு படத்தை இயக்க சான்ஸ் கொடுத்தாராம்! அந்தப் படம் நவீன ”ராபின் ஹுட்”ஸ்டைலில் இருந்ததால் மக்கள் எல்லாரும் “ஜோரா” கை தட்டி ரசிச்சாங்களாம்!

ஆனா பாருங்க, அடுத்த படத்துக்கு அவர் கிட்டே சரக்கு இல்லாம போச்சு! இருந்தாலும் அதே மீசைக்காரர் கை கால் பிடிச்சு ஒரு தாடிக்காரர் ஒருத்தரை ஹீரோவா போட்டு, ஒரு “தளுக்கு குலுக்கு” நடிகையை - நக்காதம்மா அப்படீன்னு வெச்சுப்போம் - போட்டு ஒரு படத்தை எடுத்தாராம்! அதுவும் ஏதோ ஒரு ஃப்ளூக்குல “கோக்கு மாக்கா” ஓடிடுச்சு! இதுக்கு நடுல, அந்த மீசைக்காரரு சரியா சம்பளம் குடுக்கலங்கறதுக்காக, அவர “ரோட்டில் கிடக்கும் மலம்” அப்படீன்னெல்லாம் விமர்சனம் செய்துச்சு அந்த “ஷிட்டி”!

இப்பத்தான் “ஷிட்டிக்கு” ஒரு விஷயம் புரிய ஆரம்பிச்சுது! அதாவது, படத்துல ஐயமாருங்களையெல்லாம் நல்லவங்கன்னு காட்டிட்டா படத்த எப்படி வேணும்னாலும் ஓட்டிடலாம்னு! அப்போதான் ஒரு ஜாம்பவான சந்திக்கிறாரு அந்த “ஷிட்டி”!

அந்த ஜாம்பவான் ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய எழுத்தாளராம்! தமிழ்ல எந்த விசயத்த வேணும்னாலும் ச்சும்மா அல்வா மாதிரி எழுத்துலகொடுப்பாராம்! அப்படி வெறும் வெத்துவேட்டா இருந்த அந்த “ஷிட்டி” ரோபாட்ட, அந்த ஜாம்பவான் நல்லா மெருகேத்தி பல படங்களுக்கு ஸ்க்ரிப்ட் எழுதி குடுத்தாராம்!
“ஷிட்டியும்” அதை வாங்கிக்கினு நல்ல நல்ல படமெல்லாம் டைரக்ட் பண்ணாராம்! ஆனா பாருங்க! விதியோட வெளையாட்ட!

அந்த ரெண்டு பேரும் ஒரு “ரோபோ”வைப் பத்தி ஒரு படம் பண்ணலாம்னு முடிவு பண்ணி, கோடி கோடியா செலவு செய்யுற ஒரு தயாரிப்பாளர பிடிச்சு, ஒரு “வெரல் சூப்பர ஸ்டாரை” வெச்சு ஒரு படம் எடுத்தாங்களாம்! திடீர்னு ஒரு நாள் அந்த ஜாம்பவான் கிட்னி, லிவர், ஹார்ட்டு அப்படீன்னு எல்லா பாகங்களும் புட்டுக்குனு “ரங்கனோட” திருவடிக்குப் போய் சேர்ந்துட்டாராம்!
அந்த ஜாம்பவானோட சாவுக்கு ஊர்ல இருந்த எல்லா பெரிய மனுசங்களும் வந்தாங்களாம் ஒரு குண்டம்மாவைத் தவிர! அம்மாம்பெரிய சாவா இருந்திச்சாம் அது! அந்த ஜாம்பவானப் பத்தி எல்லா பெரிய மனுசங்களும் பேசினாங்களாம்! அப்படி அந்த “ஷிட்டி” ரோபோவும் பேசிச்சாம்!

அப்போ அது சொல்லுச்சாம் “அந்த ஜாம்பவான் என்ன ஸன் மாதிரிதான் நெனெச்சிட்டு இருந்தாரு! படத்துக்குப் படம், சம்பளம் கேட்டப்பவெல்லாம் “அது பெரிய விசயம் இல்ல ஷிட்டி! நீ குடுக்கறத குடு! நீ என் ஸன் மாதிரி” அப்படீன்னு சொல்லுவாராம்! அது மாதிரி அந்த “ரோபோ” படத்துக்கு சம்பளம் பேசிக்கிட்டாங்களாம்! ஆனா பாருங்க! அதுக்குள்ள அந்த ஜாம்பவான் போய் சேர்ந்துட்டாரு!

அதுவரைக்கும் அந்த ஜாம்பவான் இல்லாம எனக்கு எதுவும் ஓடாது அப்படி இப்படீன்னு சொல்லிட்டு இருந்த “ஷிட்டி” ரோபாட், அந்த புதுசா பண்ணின “ரோபோ” படத்துல ஜாம்பவானோட பேர மட்டும் ச்ச்சும்மா ஒரு “ஒட்டுக்க்கா” போட்டுட்டாரு டைட்டில்ல! அது மாத்திரம் இல்ல! அந்த ஜாம்பவானோட பேரோட, ஒரு “வயிறு எரியும் முத்து” அப்படீங்கற ஒரு கவிஞரோட பையன் பேரையும் சேர்த்து போட்டுடாராம்!

அதாவது, தனக்கு வரம் குடுத்த ஒரு சாமியார் மேலேயே கை வெச்சு பாத்த பத்மாசுரன் மாதிரி கதை போகுது! இன்னும் எத்தன நாள் போகும்னு தெரில!

இப்போ, ”எந்திரன்” கதைக்கு வருவோம்!

ஒரு புரொஃபஸரு, ரொம்ப ரொம்ப பெரிய படிப்பெல்லாம் படிச்சுட்டு பல வருசம் ஆராய்ச்சியெல்லாம் செஞ்சுட்டு ஒரு “ரோபாட்ட” கண்டுபிடிக்கிறாரு! அவருக்கு உதவறதுக்கு அல்லக்கைங்க மாதிரி சந்தானமும் கருணாஸும்! சத்தியமாச் சொல்றேங்க! அந்த டைரக்டர் நாய் மட்டும் கைல கெடச்சான், மவனே கொத்து பரோட்டாத்தான்! பின்னே என்னங்க? கருணாஸ் எம்.எஸ்.சி. படிச்சவராம்! ஆனா ஒரு வார்த்தை தமிழ்ல பேச முடியலைங்க அவரால!

சரி விடுங்க! அப்புறம் அந்த ரோபோவுக்கு ஃபீலிங்க்ஸ் கொடுக்குறாரு நம்ம புரொஃபஸரு! எப்படி? பேப்பர்ல போர்டுல எல்லாம் எழுதி “காதல், காமம்” அப்படீன்னு சொல்லிக்குடுக்குறாரு! அய்யா சாமியோவ்! அடிக்க வராதீங்க! நான் பீலா விடலைங்க! அந்தப் படத்துல அப்படித்தான் காமிக்கிறாங்க! அப்படியே நம்ம ஸ்கூல் பசங்களுக்கும் பேப்பர்லேயே எழுதிக் காட்டிட்டா இந்த பாலியல் கல்வி அதாங்க “செக்ஸ் எஜுக்கேசன்” விஷயத்த ச்சும்மா நூல் பிடிச்சி போயிரலாம்!

சரி ஃபீலிங்ஸ் வந்திச்சா! அப்புறமாத் தான் தெரியுது, நம்ம புரொஃபஸரோட காதலியை அந்த ரோபோவும் காதலிக்குது! பாட்டெல்லாமும் பாடுது! இதப் பாத்த புரொஃபஸருக்கு கோவம் வந்து அந்த ரோபோவ பிச்சுப் போட்டுடறாரு! இதுக்குன்னே காத்துட்டு இருக்குற வில்லன்(ர்) அத எடுத்து, தன் குகைக்குள்ளே கொண்டு வந்து அதுக்கு கெட்ட கெட்ட விசயத்த எல்லாம் கத்துக்குடுக்குறாரு! நம்ம “ஷிட்டி” மாதிரியே அந்த “சிட்டியும்” - அதாங்க அந்த ரோபோ - தன்னோட குருவையே கொன்னுட்டு, தன் மாதிரி பல ரோபோக்கள உருவாக்கிடுது!

அது மட்டும் இல்லாம, நம்ம ஹீரோயினிய கடத்திக்கினு போய் ஊருக்கு ஒதுக்குப் புறமா - நம்ம ராஜா ராணி கதைல வருமே அதேதான் - கூட்டிப் போய் அவள கொடுமப் படுத்துது! நம்ம ஹீரோ அந்தக் காலத்து படத்துல வர்ற மாதிரி (கழுதை வேசம் போட்டுக்கிட்டுப் போய் காவல் காரன்கிட்டே பாட்டிப் பாடிக்கிட்டே நைஸா உள்ளே போய் ஹீரோயின்கிட்டே துணிய தூக்கிக் காமிச்சி “நாந்தான் ஹீரோ வந்திருக்கேன்” அப்படீன்னு வருமே, அதேதான்!) உள்ளே போய் எல்லா ரோபாட்டையும் “இண்டிபெண்டன்ஸ் டே” படத்துல வர்ற மாதிரி எல்லா ரோபோவையும் ஒழிக்கிறாரு! அதான் கதை!

இதுல பாத்தீங்கன்னா, தந்திரன் படத்துல வர்ற “ஷிட்டி” ரோபோதான் இந்திரன் படத்த டைரக்டு பண்ணியிருக்கு! தான் எடுத்த படத்துல மட்டும் “குருவ மிஞ்சின சிஷ்யன்” இருக்கக்கூடாதுன்னு காட்டுது! ஆனா, நெஜத்துல குருவ மொத்தமா ஓரங்கட்டி, அவரு கிட்டேருந்து ஐடியாவெல்லாத்தையும் உறிஞ்சு கடைசில கண்டுக்கவே மாட்டேங்குது!

என்ன, ஒண்ணு சினிமா! இன்னொண்ணு சினிமா ஒலகம்!

ஆங்.... நம்ம பஞ்ச் சொல்லலையே!

எந்திரன்: நூறு கோடி ரூபாய்ல கட்டின குட்ச! லிப்ஸ்டிக்கு போட்ட பன்னி! லிப்ஸ்டிக்கு போட்டாலும் பன்னி பன்னிதானே?

தந்திரன்: விரைவில் ஆப்பு!

Monday, June 21, 2010

ஒரு கதை!

இந்தக் கதை சுமார் 20 வருடங்களுக்கு முன்பு ஒரு தமிழ் வாரப்பத்திரிக்கையில் வந்தது! எழுதியவர் யாரென்று நினைவில் இல்லை! ஒரு பக்கக் கதையாக வந்திருந்தது! ஆனால், இன்னும் மனதில் பசுமரத்தாணியாக பதிந்திருக்கிறது!

-------------------------------------------------

அந்த நாற்பது வயது ஆள் ஒரு பத்து வயது சிறுவனுடன் அந்த சின்ன ஹோட்டலுக்குள் நுழைந்தான்! நுழையும்போதே கூட வந்த சிறுவனை ஏதோ வசைபாடியபடிதான் வந்துகொண்டிருந்தான்! சிறுவனும் முகத்தில் எந்தவித முகபாவமும் காட்டாமல் கூடவே நடந்துகொண்டுவந்தான்!

வந்தவர்கள் ஒரு டேபிளில் உட்கார்ந்தார்கள்! சர்வர் வந்து “என்ன சார் வேணும்” என்று கேட்டான்!

அந்த நா.வ. ஆள் “எனக்கு ஒரு மசால் தோசை” என்று சொல்லிவிட்டு சிறுவனைப் பார்த்து “உனக்கு என்னடா வேணும்” என்று கேட்டான்! சிறுவன் தயங்கியபடியே - தவறு பயந்தபடியே - உட்கார்ந்திருந்தான்! காதில் வைத்திருந்த பென்சிலை குடாய்ந்தபடியே, சர்வர் “இட்லி தோசை பூரி இதெல்லாம் இருக்குதப்பா! என்ன வேணும்னு சொல்லு” என்று எடுத்துக்கொடுத்துவிட்டு நகர்ந்தான்!

சிறுவனும் ஆசையாக “ஒரு தோசை” என்று சொல்ல, அந்த நா.வ. ஆள் அவனை பளாரென்று அறைந்தான்! “உனக்கு எதுக்குடா தோசை? வயித்தில எடம் இருக்காது” என்று சொல்லிவிட்டு “உனக்கு ஒரு ப்ளேட் இட்லி போதும்”! சிறுவன் “அப்போ கூடவே ஒரு வடையும்....” என்று இழுக்க, அதற்கும் ஒரு அடி! “வடை இல்லைன்னா உங்களுக்கு சாப்பாடு எறங்காதோ”!
கூடவே ஒரு பளார்!

”சர்வர்! இங்கே வாப்பா! ஒரு மசால் தோசை, ஒரு ப்ளேட் இட்லி கொண்டுவா”! ஆர்டர் செய்துவிட்டு அந்த ஆசாமி ஹோட்டலை நோட்டம் விட்டான்! சிறுவன் என்ன சொல்வதென்றும் செய்வதென்றும் தெரியாமல் உட்கார்ந்திருந்தான்!

சாப்பாடு வந்தது! இருவரும் சாப்பிட்டுவிட்டு முகம் தூக்கையில், சர்வர் “சார் காப்பியா டீயா?” என்று கேட்டான்! சிறுவன் வாயைத் திறக்கக்காணுமே? ஹூஹூம்!

சர்வர்தான் “இங்கே காப்பி ரொம்ப நல்லா இருக்கும்பா” என்று எடுத்துக்கொடுக்க, சிறுவன் “எனக்கு டீதான் வேணும்” என்று சொல்ல, அடுத்து ஒரு பளார்!

இதையெல்லாம் சகித்துக்கொண்டிருந்த பில் மாஸ்டர் சீட்டிலிருந்து எழுந்து வந்து, அந்த நா.வ. ஆசாமியிடம் “சார் இவன் உங்க பிள்ளைங்களா” என்று சந்தேகத்துடன் கேட்டான்! “ஆமா சார்! இவன் என் பிள்ளைதான்”!

”அப்புறம் எதுக்கு சார் அவனை போட்டு அனாவசியமா அடிக்கிறீங்க” என்று பில் போடுபவர் கேட்டார்!

“நான் இப்படி சின்ன வயசுல எங்கப்பன் கிட்டே அடி வாங்கினப்போ நீங்க எங்கே போயிருந்தீங்க?”! சாட்டையடி போல நா. வ. ஆசாமி கேட்டதற்கு பில் மாஸ்டரிடம் பதில் இல்லை!

------------------------------------

Friday, May 21, 2010

காஃபி குடித்தல்!




நான் இராமகிருஷ்ணா மிஷன் ஹை ஸ்கூலில் படித்தபோது நடந்த சம்பவம் இது! இன்றைக்கும் இது மறக்கவில்லை! எப்போதும் மறக்காது என்றும் நினைக்கிறேன் ஏனென்றால் அப்படியாப்பட்ட சப்ஜக்ட் இது!

நான் ஒன்பதாவது படிக்கும்போது, தமிழ் வாத்தியார் ஒருவர் எங்களுக்கு அறிமுகமானார்! அவர் பெயர் அம்மையப்பன்! அப்போது அவருக்கு நாற்பது சொச்சங்கள் இருக்கும்! மற்ற வாத்தியார்களைப் போல
சிங்கியடித்துக்கொண்டு இருக்கவில்லை அவர்! சரியான பணக்காரர் என்று சொல்லிக்கொள்வார்கள்! தினமும் சஃபாரி டிரஸ்ஸில்தான் வருவார் என்றால் பார்த்துக்கொள்ளூங்கள்! ஜாலியாக பேசுவார்!
மாணவர்களை திட்டுவாரே தவிர, அடிக்கமாட்டார்!

சரி, விஷயத்துக்கு வருவோம்! நான் ஒன்பதாவது படிக்கையில், ஒரு க்வார்ட்டர்லி லீவில், அவர் ஒரு மாதம் லீவு எடுத்துக்கொண்டு சிங்கப்பூர், மலேஷியா, ஹாங்காங், ஜப்பான் போன்ற நாடுகளை சுற்றிப் பார்க்க போயிருந்தார்!

ஊரெல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு ஒரு நாள் எங்கள் கிளாசுக்கு தமிழ் வகுப்பு எடுக்கவந்தார்! ஃபாரின் போய்விட்டு வந்த பிறகு அவரிடம் நிறையவே மாற்றம்! கைகளில் எக்ஸ்ட்ரா மோதிரங்கள், பிரேஸ்லெட், மற்றும் தடியான தங்கச் சங்கிலி! செண்ட் அடித்திருந்தார் என்று சொல்லவே வேண்டாம்!

அவர்தான் ஜாலி பேர்வழியாயிற்றே! கிளாஸில் ஒருவன் சும்மா இல்லாமல், “சார்! பாடம் அப்புறம் இருக்கட்டும் சார்! மொதல்ல உங்க பயண அனுபவத்தை சொல்லுங்க சார்!” என்று கேட்டான்!

அவ்வளவுதான்! மடை திறந்த மாதிரி சுமார் ஒரு மணி நேரத்துக்கு, எங்கேல்லாம் போனேன் என்று சொன்னார்!

சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகளில் எப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள்! பழக்க வழக்கம், கலாச்சாரம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தார்! திடீரென்று, ஜப்பானைப் பற்றி
ரொம்பவே புகழ ஆரம்பித்துவிட்டார்!

“அங்கெல்லாம் டி.வி., ரேடியோ, டேப் ரிக்கார்டர் எல்லாத்தையும் தெருவுல போட்டு கூறு கட்டி விக்குறான்! பாக்கவே நல்லா இருந்தது!” என்றெல்லாம் அளந்து கொண்டிருந்தார்! அப்படியே பேச்சு ஒரு விஷயத்துக்கு போய்விட்டது! அதான், செக்ஸ்!

“ஜப்பான்ல ஒரு வீதி பூராவும் அந்த மாதிரி பொம்பளைங்க இருக்காங்க! வேணுங்கறவன் அங்கே போகலாம்!” என்றெல்லாம் சொல்லிவிட்டு,
பூடகமாக, “ஜப்பானியர்களை பொறுத்தவரை கற்பு என்பது காஃபி குடிப்பது மாதிரி! அவங்களை பொருத்தவரை அது சாதாரணமான விஷயம்! எப்போ வேணும்னாலும் குடிப்பாங்க!” என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார்!

அப்போது, என் கிளாஸில் இருந்த விடாக்கண்டன் ஒரு கேள்வி கேட்டானே பாக்கலாம். “அப்போ, நீங்க எத்தனை காஃபி சார் குடிச்சீங்க?”!

அவனுக்கு அடி கெடச்சுதுன்னு நீங்க நெனெச்சாக்க தப்பு!

அந்த கேள்விக்கு அவர் சொன்ன பதில்தான் சூப்பர். இன்னைக்கும் நெனைவுல இருக்கு!

“நான் காஃபி குடிக்கறதில்ல! டீ தான் குடிப்பேன்”!

Thursday, April 29, 2010

இது என்ன புது கலாட்டா?

(நன்றி: ஆனந்த விகடன் Dated: 05-05-2010)

மேலே உள்ள படம் ஆ.வி.யில் வரும் லூசுப் பையனின் நையாண்டி பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது! உங்களுக்குத் தெரிந்திருக்கும்! வாராவாரம்
லூசுப்பையன் என்பவர்(கள்) ஆ.வி.யில் எல்லோரையும் அநியாயத்துக்கு கலாய்ப்பார்கள்!
போன வாரம் வரை ஜெ.வை கோபலலிதா என்றே ரெஃபர் செய்து கார்ட்டூன் போட்டுக்கொண்டிருந்தார்கள்! இந்த வாரம் என்ன ஆயிற்றோ தெரியவில்லை, கோபலலிதா போய் பயலலிதா ஆகிவிட்டார்!
ஒரு வேளை ஜெ. இப்போது கோபமெல்லாம் போய் ஆ.வி.யிடன் சமாதானாமாகிப் போய்விட்டாரா? இல்லை, ஆ.வி.க்கு ஜெ. மீது இருந்த பயம்
போய்விட்டதா? இல்லை அடுத்த ஆட்சி அவங்க ஆட்சி வந்துவிட்டால், ஏன் இந்த வம்பு என்று பயலலிதா ஆக்கிவிட்டார்களா?
இது என்ன புது கலாட்டா தெரியவில்லையே?
தெரிந்தால் சொல்லுங்களேன்!

Tuesday, April 27, 2010

சாருவைப் பாரு!

இன்று சாரு தன் பிளாக்கில் தன் உயிர்த் தோழி, சாருவின் கவிதைகளை
நினைத்துக்கொண்டே காரை ஓட்டி நடைபாதையில் ஏற்ற இருந்ததாகவும், இனிமேல் அந்தத் தோழி அப்படி செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்வதாகவும் சொல்லியிருக்கிறார்!

ஏன்யா! அவள் எந்த மாதிரியான தோழியாக இருந்துவிட்டுப் போகட்டும்! லூசு மாதிரி காரை ஓட்டி நடைபாதையில் ஏற்ற இருந்த (அல்லது, நடைபாதையில்
இருந்த யார் மீதாவது ஏற்ற இருந்த) ஒரு குடாக்கை, பளார்னு அறைய வேண்டாமா? அல்லது திட்டவேண்டாமா? அதையெல்லாம் விட்டுவிட்டு “கேட்டுக்கொள்கிறாராம்”.

என்னைக் கேட்டால், அந்த அன்புத் தோழியிடம் சாருவின் கவிதைகளை படிக்காமல் இருக்க கேட்டுக்கொள்ளவேண்டும்!

Friday, January 29, 2010

நோ காமெண்ட்ஸ்!




(நன்றி: விடுதலை 29th January 2010)




இந்த விளம்பரம் சனவரி 29த் தேதியட்ட “விடுதலை” ஏட்டில் வந்தது! அய்யா அவர்கள் நடத்தும் பத்திரிக்கை!




படத்தைப் பாருங்கள்! குறிப்பாக சிகப்பு வட்டமிட்ட இடத்தைப் பாருங்கள்!


இதற்குமேல் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை!






Tuesday, January 26, 2010

குரலில் ஒரு பயங்கரம்!

சாதாரணமாக, குரலில் இருக்கும் கம்பீரம் பல பேருக்கு உடலில் இருப்பதில்லை! ஃபோனில் ஒருவரின் குரலைக் கேட்டுவிட்டு, அவரைப் பற்றிய கண்ணோட்டத்துக்கு நாம் பலமுறை வெகுதூரம் போயிருக்கிறோம்!

இந்தியர்களின் தொண்டைக் கட்டு மேற்கத்தியர்களின் தொண்டையைப் போல இருப்பதில்லை! இதற்கு யாராவது அறிவியல் காரணம் கண்டுபிடித்திருந்தால் எனக்கு பின்னூட்டம் இடலாம்!

எனிவே, அமெரிக்கர்களின் தொண்டைக் கட்டு ரொம்பவே அடித்தளத்திலிருந்து வரும்! முக்கால்வாசி அமெரிக்கர்கள், பள்ளியில் படிக்கும்போதே குரல் உடையும்போது, ரொம்பவே உடைந்து பயமுறுத்தும் தோற்றத்தை நம் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்தும்! நம்மூர்க்காரர்கள், என்னையும் சேர்த்து, குரலில் அந்த deep voice என்று சொல்லக்கூடிய விததில்
இருக்காது!

சரி, அட்லீஸ்ட், ஆண்கள் குரல் ஆண்கள் போலவும் பெண்களீன் குரம் பெண்மையின் நளினத்துடன் இருந்தபட்சத்தில் நோ பிராப்ளம்! நம்மூரில் பல ஆண்களுக்கு பெண் குரல் போலவும், பெண்களுக்கு ஆண்குரல் போலவும் இருப்பதில்தான் பிரச்சினையே! நம்மூரில் இப்போது பல ஆஸ்பத்திரிக்கைகளில் தொண்டை ஆபரேஷன் செய்து குரலை சரி செய்கிறார்கள்! அதெல்லாம் இப்போதுதான்!

நான் சொல்வது சுமார் 20 வருடங்களுக்கு முன்! நான் +2 படிக்கும்போது, என் வகுப்பில் ஒரு மாணவன் இருந்தான்! சுமார் ஐந்தடி உயரம், ஆள் பார்க்க, ச்சும்மா ஹீரோ போல டிரஸ் செய்துகொள்வான்! படிய வாரிய தலைமுடி, ட்ரிம் செய்த மீசை (ஆம், அவனுக்கு அப்போதே அடர்த்தியாக மீசை இருந்தது) டிப் டாப்பான உடை, விலை உயர்ந்த வாட்ச் போன்றவைகளுடன்
தகதகவென்று மின்னுவான்! ஆனால், பாவம்! வாயைத் திறந்தால் போச்சு! அப்படியே ஒரு பத்து வயது சிறுமி மாதிரி பேசுவான்! அவன் இப்போது என்ன செய்கிறான் என்று தெரியவில்லை! ஆனால் பள்ளியில் படிக்கும்போது அவனுக்கு ஏழரை நடந்திருக்கும் என்று சொல்லித்தான் தெரிவதில்லை!

நான் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் சென்னையில் ஒரு கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன்! அது “நானே ராஜா நானே மந்திரி” மாதிரியான ஒரு வேலை! நாவல் நெட்வர்க்கில் இம்ப்ளிமெண்ட்
செய்த - நானே கையால் எழுதிய - ஃபாக்ஸ் ப்ரோ பிரோகிராம்கள்தான் என் வாழ்க்கையின் ஆர்மபம்! அப்போது சும்மா இல்லாமல் சைட் பிஸினஸாக ரிப்பன் இங்க் மற்றும் ப்ரிண்டர் பேப்பர் ஆகியவைகளை
இடது கையில் வாங்கி வலது கையில் விற்பனை செய்துகொண்டிருந்தேன்!

அப்போது பழக்கமான ஒரு கம்பெனியில் ஒரு பெண்மணி இருந்தார்! அவர் ஜாதியில் பதினாறு வயதிலேயே கல்யாணம் செய்துகொடுத்துவிட்டார்கள்! கணவன் ஒரு மளிகைக் கடை ஓனர்! அந்த பெண்மணி, அவர் மூலமாக ரெண்டு குழந்தைகளை பெற்றெடுத்தார்! வீட்டில் சும்மா இல்லாமல், ஆங்கிலத்திலும் வரலாறிலும் எம்.ஏ. படித்திருந்தார்! தனக்கும் கணவணுக்கும்
சரியான அண்டர்ஸ்டாண்டிங் இல்லாததால்,. டைவர்ஸும் வாங்கியிருந்தார்! தானே வேலை செய்து இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றிக் கொண்டிருந்தார்!

விஷயம் என்னவென்றால், அவருக்கு ஆண் குரல்! அவர் பெயரும் ஆண்பிள்ளைத்தனமாகத் தான் இருக்கும்! பல சமயம் அவர் தன்னை பெண் என்றே சொல்லிக்கொள்ளாமல் தான் வேலை பார்த்துக்கொண்டிருந்த
கம்பெனியில் சீனியர் சேல்ஸ் மேனேஜராக ஆகியிருந்தார்!

ஒரு முறை, என் குடும்ப நண்பர் ஒருவர் அந்த பெண்மணி வேலை செய்யும் கம்பெனிக்கு ஃபோன் போட்டு அவரிடம் பேசியிருக்கிறார்! பெண்மணி தன்னை பெண் என்றே சொல்லவில்லை! நண்பர், தான் பேசியது ஆண் என்றே நினைத்துக்கொண்டிருந்தார்! ஒரு நாள் அந்த் பெண்மணியை - பெண் என்று தெரியாமல் - அவர் ஆஃபிஸுக்கே சென்று சந்திக்கப் போக, அந்த பெண்மணி நண்பரிடம் கையைக் குலுக்கு “நாந்தான் .....” என்று சொல்ல, நண்பர் விட்டார் ஓட்டம்!

பிறகு ஒரு நாள் நண்பர் என்னிடம் “ஏண்டா! உனக்குத் தான் தெரியுமே? ஏன் என்னிடம் சொல்லவில்லை?” என்று கடிந்துகொண்டார்! “சாரி!” என்று சொல்லி சமாளித்தேன்!

இப்போது சுமார் 15 வருடங்கள் ஓடிவிட்டன! எப்போது நினைத்தாலும் சிரிப்பை வரவழைக்கும் ஒரு நிகழ்ச்சி அது!