Friday, June 5, 2009

மொட்டை என்கிற ம்யூசிக்கல் ஜீனியஸ்

என்னடா எல்லாரும் நம்ம ம்யூசிக்கல் தலையைப் பத்தி எழுதறாங்க நாமளும் எழுதனுமேன்னு வந்தது இந்த போஸ்ட்! அது சரி, அடுத்தவங்களெல்லாம் எழுதறாங்கன்னா அவங்களுக்கு சங்கீத ஞானம் கொஞ்சமாச்சும் இருக்கும்போல! நமக்கெல்லாம் அவ்வளவு இல்லென்னாலும் சில விஷயங்களை புரிஞ்சிக்க முடியுதுங்க!

பாருங்களேன்! இப்படித்தான் சமீபத்தில் அதாவது 1984-இல் (டோண்டு ராகவனின் பழக்கும் எனக்கும் தொத்திக்கிட்டது போல) நான் +1-வது படிக்கையில் என் சித்தப்பா ஒரு ஆடியோ காசெட்டை கொண்டுவந்து கொடுத்தார்! அப்போதுதான் ஃக்வார்டெர்லி எக்ஸாம் முடிந்த சமயம்! அப்போதெல்லாம் ஸ்டீரியோ ஃபார்மேட்டில் பாட்டு வேணும்னா நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஆடியோ கடையில்தான் காசெட் ரெக்கார்டிங் செய்வார்கள் (ஸ்டிரியோவிஷன்)! அந்த காசெட்டில் இருந்த பாட்டுக்கள் எல்லாம் ரிலீஸ் ஆகாத பாட்டுக்கள் என்று வேறு சொல்லிக் கொடுத்தார்களாம்! அதனால் எனக்கு anxiety அதிகமானது! A-சைடில் ரீவைண்ட் செய்து போட்டேன்! முதல் பாடலே ஒரு மாதிரி இருந்தது! என்னவோ “வானிலே தேனிலா” என்றெல்லாம் பாடியது! ஆனால் அந்தப் பாட்டில் ஏதோ ஒன்று சரியில்லை அல்லது வித்தியாசமாக இருக்கிறது என்று மட்டும் தெரிந்தது! ஆனால் அந்தப் பாடல் எல்லாம் “காக்கிச் சட்டை” படத்தில் வருமென்றெல்லாம் தெரியாது எனக்கு அப்போ!

எதற்கு சொல்கிறேன் என்றால்! 1985 ஏப்ரலில் அந்தப் படம் வெளிவந்தபோது “ஒளியும் ஒலியும்” நிகழ்ச்சியில் போட்ட ஒரு பாட்டு எங்கேயோ கேட்டமாதிரி இருக்கேன்னு பாத்தால், நம்ம கிட்டே ரொம்ப மாசத்துக்கு முன்னமேயே வந்த காசெட்டில் இருந்துருக்கிறது! இதை என் நண்பனிடம் சொன்னபோது என்னை ”ஏண்டா முன்னமேயே சொல்லலை” என்று உதைக்காத குறையாக திட்டி வாங்கிக்கொண்டு போனான்!

சரி, விஷயத்துக்கு வருவோம்! “வானிலே தேனிலா” பாட்டை நான் பலமுறை கேட்டிருக்கிறேன்! என்னிடம் ஒரு ஓட்டை உடைசல் வாக்மேன் இருந்தது! அதில் பேட்டரி தீரும் வரை அந்தப் பாட்டையே சுமார் 30 வாட்டிகேட்டிருக்கிறேன்! அப்போதுதான் புரிந்த்து ரெண்டு விஷயம்!

மொதல் விஷயம் என்னன்னா! சாதரணமா, ரிதம் பீட் அடிக்கும்போது, தாளக்கட்டில் நான்கோ அல்லது எட்டோ முறை அடிக்கவேண்டும்! அதுதான் சாதரணமாக எல்லோரும் பின்பற்றுவது! ஆனால், நம்ம மொட்டை, அதை மூன்றாக்கியிருப்பார் பாருங்கள்! சூப்பர்! அதாவது “ட ட ட டா” என்று அடிக்காமல் “ட்டா ட டா” என்று அடித்துருப்பார்! அதாவது மொதல் பீட்டையும் ரெண்டாவது பீட்டையும் சேர்த்த மாதிரி அதே சமயம் இரண்டு மாத்திரையில் அடிக்காமல் ஒன்றரை மாத்திரையில் அடித்திருப்பார்! எனக்குத்தெரிந்து மொட்டையின் பாடல்களில் வெளிவந்த முதல் இலக்கண மீறல் என்று நினைக்கிறேன்!

இரண்டாவது விஷயம் என்னன்னா, சாதரணமா, டிரம்ஸ் பீட்டுடன் “ஹை கேப்” என்று சொல்லக்கூடிய டிரம்ஸ் செட்டில் இருக்கும் ஸ்டேண்டு போட்டார்போல இருக்கும் வட்ட இரும்பு தட்டை சேர்த்து தட்டுவார்கள்! சில சமயம் பீட்டை நிரப்புவதற்கும் அதை தட்டுவார்கள்! நம்ம ஆளு, என்ன பண்ணுவார்னா, டிரம்ஸில் ரிதம் பீட்டை வாசித்தால் பாடல் ரொம்ப “hard rock " ஆகிவிடும் என்று bango-வில் ஒரு ஆள் வாசிக்க, இன்னொரு ஆள், “ஹை கேப்பில்” குச்சியால் கூட தட்டி கொஞ்சம் “சாஃப்ட் ராக்” ஸ்டைலில் தட்டுவார்! அது கெடக்கட்டும்! நம்ம “வானிலே தேனிலா” பாட்டை கேட்டீங்கன்னா, ஆரம்ப பல்லவி, அனுபல்லவியில் ட்ரம் பீட்டுடன் “ஹை கேப்” சத்தம் ஒன்றாக கேட்கும்! முதல் “ஸ்டான்ஸா” முடிந்தபிறகு திரும்பி “வானிலே தேனிலா” பாடும்போது கேட்டீங்கன்னா ட்ரம் பீட் முதலில் வரும், அதைத் தொடர்ந்து சுமார் .1 மாத்திரையில் “ஹை கேப்” சத்தம் கேட்கும்! சரி, இப்படித்தான்னு நெனச்சீங்கன்னா, இரண்டாவது “ஸ்டான்ஸாவில்” முடிந்து “வானிலே தேனிலா” பாடும்போது “ஹை கேப்” சத்தம் முதலில் வரும்பிறகு .1 மாத்திரையில் ட்ரம் பீட் வரும்!

ஒரு வேளை, பாட்டில் ஒண்ணும் விஷயம் இல்லைன்னுதான் ஏதாவது வித்தியாசமா இருக்கணும்னு மொட்டை அப்படி செஞ்சாரோ, தெரியாதுங்க! ஆனா, அந்தப் பாட்டை இன்னொரும் வாட்டி கேட்டிங்கன்னா ஏதோ ஒண்ணு ரெண்டு வித்தியாசமா இருக்கறத பாக்கலாம்!

இதே உத்தியை “தென்றலே என்னைத் தொடு” படத்தில் வரும் “கவிதை பாடு குயிலே குயிலே” பாட்டிலும் செய்திருப்பார்!

சும்மாவா சொன்னாங்க? அவரு ஒரு ஜீனியஸ்னு?