Wednesday, February 27, 2008

சுஜாதாவின் மரணம்

சுஜாதா மரணமடைந்துவிட்டார்!

எனக்குத் தெரிந்து 25 வருடங்களாக சுஜாதாவை படித்து வருகிறேன்!
அவர் சிறுகதைகளை படித்த அளவுக்கு அவர் நாவல்களை படித்ததில்லை! இருந்தாலும் அவரை விட அவர் எழுத்துக்கள் எனக்கு ரொம்பவே பரிச்சயம்!
ஆரம்ப காலத்து கணேஷ்-வசந்த்உரையாடல்களில் ஆரம்பித்து இன்றைய - மன்னிக்கவும் - நேற்று அவர் எழுதிய "கற்றதும் பெற்றதும்" வரை அவர்
எழுத்துகள் பரிச்சயம்!

சொல்லப்போனால், அவர் எழுத்துகள்தாம் எனக்கு தமிழை அறிமுகம் செய்தது
என்று கூட சொல்லலாம்! ஒரு கட்டத்தில் அவர் சிறுகதைகளைத் தான்
படிப்பேன்! அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக பார்வையை விரிவுபடுத்தி பல எழுத்தாளர்களை படிக்கிறேன்! இருந்தாலும் First Love போல First Author
ஆகையால் கொஞ்சம் ஓர வஞ்சனை!

பல வருடங்களாக அமெரிக்காவில் இருப்பதால் எனக்கு தமிழ் படிக்கும் பழக்கம் விட்டுப் போகாமல் இருந்தாலும் தமிழில் எழுதும் பழக்கம் சுத்தமாக
விட்டுப் போனது! இன்று நான் தமிழில் வலைப்பூ எழுதும் அளவிற்கு
வந்திருக்கிறேன் என்றால் அதற்கு முழுக்க முழுக்க சுஜாதா தான் காரணம்!

அவர் மரணம் என்னை ஏதோ செய்கிறது! ஏதோ அமானுஷ்யமாக இருக்கிற ஒரு உணர்வு! என்னை சுற்றி இருக்கும் விஷயங்கள் நகருவதைப் போலவும் நான் மட்டும் அப்படியே உறைந்து போனது போலவும் இருக்கிறது!

இனிமேல் அவர் இடத்தை நிரப்ப யார் வரப்போகிறார்கள்? அப்படியே வந்தாலும் அவர் எழுத்தில் இருக்கும் உணர்வுகளை கொண்டுவர முடியுமா?

அவர் ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்!