நேற்று தினமணி பத்திரிக்கையில் “மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்” என்ற தலைப்பில் சுமார் நூறு வருடங்களில் மெட்ராஸ் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது, அதுவும் திருவல்லிக்கேணியை எப்படிஆங்கிலேயன் தன் கைப்பிடிக்குள் உருவிக்கொண்டான் என்பது முதற்கொண்டு எழுதியிருந்தார்கள்!
அதைப் படித்ததும், எனக்கு தி.நகர் தான் ஞாபகத்துக்கு வந்தது! நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் தி.நகரில் தான்! சுமார் 12 வயது இருக்கும்போதுதான் தி. நகரை விட்டு ந.நல்லூருக்குவந்தோம்! நான் சிறு சிறுவனாக இருந்தபோது தி. நகர்தான் எல்லாமே எனக்கு! நான் மட்டும் அல்ல என் அக்காக்கள் அனைவருக்கும் தி. நகர்தான் ஞாபகத்துக்கு வரும்! அவர்களை விடுங்கள்! என் சித்தப்பாககள் அவர்களின் இளமைப் பருவத்தில் ஆட்டம்போட்டது எல்லாமே தி. நகர் தான்!
அதிலும் என் தாத்தா நாற்பதுகளின் தொடக்கத்திலேயே தி. நகருக்கு வந்துவிட்டாராம்! அவர் கட்டிய முதல் வீடு பனகல் பார்க் எதிரில் இருந்தது! இப்போது “பிரமாண்டமாய்” இருக்கும்சரவணா ஸ்டோர்ஸ் இருந்த இடத்தில் தான் ஒரு பெரிய பங்களா இருந்தது! மார்வாடிக்கு சொந்தமானது! அந்த மார்வாடியும் என் தாத்தாவும் நண்பர்கள்! நண்பனுக்கு வீட்டை கட்டிக் கொடுப்பதற்கு சொல்ப சம்பளம் தான் வாங்கினாராம் தாத்தா! அதற்கு பிரதியுபகாராமாய் துரைசாமி பாலத்தின் அருகில் ஓரிரண்டு கிரவுண்டுகள் வாங்கித் தருகிறேன் என்றாராம்அந்த மார்வாடி! அதற்கு என் தாத்தா “அடப் போடா! இந்த இடத்துல எவண்டா வீடு கட்டுவான்?” என்றாராம்!
அவர் கேட்டதிலும் ஒரு நியாயம் இருந்தது! 40’களில் தி. நகர் உஸ்மான் ரோட்டில் ஆள் அரவம் இருக்காதாம்! அங்கே இங்கே என்று ஓரிரண்டு வீடுகள்! சீனிவாச்சாரி மருத்துவமனை இருந்தது (ராமனாதன் தெருவுக்கு பக்கத்தில்)! பிறகு அதற்குப் பக்கத்தில் சாரதா வித்யாலயாவின் (ராமகிருஷ்ண மடம்) சிறுவர் பள்ளி இருந்தது! அதை விட்டால் மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன் தான்! உஸ்மான் ரோட்டின் இரு பக்கத்திலும் மரங்கள் இருக்குமாம்! அங்கே பொழுது சாய்ந்த பிறகு யாரும் போக பயப்படுவார்களாம்!
இப்போது சொல்லுங்கள்! அங்கே மனை வாங்குவது ஒரு “திகில்” கிளப்பும் விஷயமாகத்தானே இருந்திருக்கும் என் தாத்தாவுக்கு? அதே மாதிரி, பழைய மாம்பலத்தில் ஒரு ஏரி இருந்ததாம்! அதனாலேயே அங்கு கொசு ரொம்பவே அதிகமாம்! துரைசாமி சப்வே வருவதற்கு முன்னால் அங்கு ரயில்வே கேட் தான்! என் தாத்தா “பழைய மாம்பலத்தில் எல்லாம் எப்படித் தான் மக்கள் வசிக்குறாங்களோ?” என்று நொந்து கொள்வாராம்!
அதற்குப் பிறகு ஐம்பதுகளில் சென்னை பிக்கப் ஆகும் சமயத்தில், கோடம்பாக்கம் பிரசித்தி பெறத்துவங்கியது! அப்போது ரங்கராஜபுரம் ஏரியாவில் மனை வாங்கச்சொன்னபோது, “அங்கே எல்லாம் எவன் போக முடியும்? மழைக் காலத்தில் மாட்டு வண்டி சேற்றில் மாட்டிக்கும்! நான் அங்கேயெல்லாம் வீடு வாங்கமாட்டேன்” என்றெல்லாம் உதார்விட்டு கடைசி வரை வாடகை வீட்டில் வாடகை கொடுக்கமுடியாமல் உயிர் விட்டார்!
சொல்லப்போனால், எழுபதுகளில் கூட, துரைசாமி ரோட்டில் நாங்கள் போக மாட்டோம்! அங்கே ஒரே இருட்டாக இருக்கும்! ஆறு மணிக்குப் பிறகு “ஓ” வென்று இருக்கும்! தவிரவும், அங்கே ஒரு விறகுக் கடை இருந்தது! என்னமோ எங்களுக்கு விறகுக் கடை மேல் ஒரு பயம்! அதனால் பகலிலேயே அந்தப் பக்கம் போகாமல் எதிர் வாடையில் நடப்போம்!
அதே போல, வெங்கடநாராணா ரோட்டில் சாதாரணமாகவே போகமாட்டோம்! அப்போதெல்லாம், சாலையின் இரு பக்கமும் மரங்கள் ஓங்கி வளர்ந்திருக்கும்! அதனால் பகலிலேயே வெளிச்சம் இருக்காது! அதுவே ஒரு அமானுஷ்யமாக தென்படும் எங்களுக்கு! வீடு! இல்லை ராமகிருஷ்ணா ஸ்கூல்! இதுதான் எனக்கு அப்போதெல்லாம்!
இன்னொன்றும் சொல்ல மறந்துவிட்டேனே? பனகல் பார்க்கின் வடக்குப் பகுதியான (கோடம்பாக்கம் ரோட்டை இணைக்கும் உஸ்மான் ரோட்டின் ஸ்ட்ரெட்ச்) இடத்தில் “ஓ” வென்று இருக்கும்! நான் ஸ்கூலில் படித்தபோது என் கூட படித்த ஒரு ஸ்னேகிதியின் வீடு அங்கேதான் இருந்தது! அவளின் சகோதரியும் என் அக்காவின் கிளாஸ்மேட் ஆதலால், அவ்வப்போதுபோய் வருவோம்! எங்கே என்றால், தற்போது “இசை ஞானி” என்று சொல்லப்படும் “மொட்டையின்” வீடு இருக்கிறதே முருகேச முதலி தெரு! அங்கேதான்! சாரதா ஸ்கூலில் இருந்துஒரு இரண்டு நிமிஷம் நடந்தால் அவர்கள் வீடு வந்துவிடும்! ஆனால், அதற்கே ஒரே ஓட்டமாக ஓடுவோம்! தவிரவும் அங்கே ஒரு பெரிய்ய்ய தூங்கு மூஞ்சி மரம் இருந்தது! அதை கணக்காக எடுத்துக்கொண்டு இரண்டு மூச்சில் ஓடிப்போய்விட்டு வருவோம்! ஏன் அந்த மரத்தடியில் ரெஸ்ட் என்றால், அங்கே ஒரு பெட்டிக் கடை இருந்தது! தவிரவும் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்த நபர்கள் எல்லாம் அந்தக் கடை வாசலில்தான் டீ குடித்துக்கொண்டு இருப்பார்கள்! அதனால் ஒரு சேஃப்டி!
இப்போது என்னடானா, உஸ்மான் ரோட்டில் நடந்து போவதற்கே மூச்சு வாங்குகிறது! தி. நகரை நகை வாங்குவதற்கு ஒரு குறியீடாக பயன்படுத்துகிறார்கள்! அதை விடுங்கள்! மாம்பலம் என்பதையே தி. நகர் என்று மாற்றிவிட்டாரக்ள்!