Monday, June 21, 2010

ஒரு கதை!

இந்தக் கதை சுமார் 20 வருடங்களுக்கு முன்பு ஒரு தமிழ் வாரப்பத்திரிக்கையில் வந்தது! எழுதியவர் யாரென்று நினைவில் இல்லை! ஒரு பக்கக் கதையாக வந்திருந்தது! ஆனால், இன்னும் மனதில் பசுமரத்தாணியாக பதிந்திருக்கிறது!

-------------------------------------------------

அந்த நாற்பது வயது ஆள் ஒரு பத்து வயது சிறுவனுடன் அந்த சின்ன ஹோட்டலுக்குள் நுழைந்தான்! நுழையும்போதே கூட வந்த சிறுவனை ஏதோ வசைபாடியபடிதான் வந்துகொண்டிருந்தான்! சிறுவனும் முகத்தில் எந்தவித முகபாவமும் காட்டாமல் கூடவே நடந்துகொண்டுவந்தான்!

வந்தவர்கள் ஒரு டேபிளில் உட்கார்ந்தார்கள்! சர்வர் வந்து “என்ன சார் வேணும்” என்று கேட்டான்!

அந்த நா.வ. ஆள் “எனக்கு ஒரு மசால் தோசை” என்று சொல்லிவிட்டு சிறுவனைப் பார்த்து “உனக்கு என்னடா வேணும்” என்று கேட்டான்! சிறுவன் தயங்கியபடியே - தவறு பயந்தபடியே - உட்கார்ந்திருந்தான்! காதில் வைத்திருந்த பென்சிலை குடாய்ந்தபடியே, சர்வர் “இட்லி தோசை பூரி இதெல்லாம் இருக்குதப்பா! என்ன வேணும்னு சொல்லு” என்று எடுத்துக்கொடுத்துவிட்டு நகர்ந்தான்!

சிறுவனும் ஆசையாக “ஒரு தோசை” என்று சொல்ல, அந்த நா.வ. ஆள் அவனை பளாரென்று அறைந்தான்! “உனக்கு எதுக்குடா தோசை? வயித்தில எடம் இருக்காது” என்று சொல்லிவிட்டு “உனக்கு ஒரு ப்ளேட் இட்லி போதும்”! சிறுவன் “அப்போ கூடவே ஒரு வடையும்....” என்று இழுக்க, அதற்கும் ஒரு அடி! “வடை இல்லைன்னா உங்களுக்கு சாப்பாடு எறங்காதோ”!
கூடவே ஒரு பளார்!

”சர்வர்! இங்கே வாப்பா! ஒரு மசால் தோசை, ஒரு ப்ளேட் இட்லி கொண்டுவா”! ஆர்டர் செய்துவிட்டு அந்த ஆசாமி ஹோட்டலை நோட்டம் விட்டான்! சிறுவன் என்ன சொல்வதென்றும் செய்வதென்றும் தெரியாமல் உட்கார்ந்திருந்தான்!

சாப்பாடு வந்தது! இருவரும் சாப்பிட்டுவிட்டு முகம் தூக்கையில், சர்வர் “சார் காப்பியா டீயா?” என்று கேட்டான்! சிறுவன் வாயைத் திறக்கக்காணுமே? ஹூஹூம்!

சர்வர்தான் “இங்கே காப்பி ரொம்ப நல்லா இருக்கும்பா” என்று எடுத்துக்கொடுக்க, சிறுவன் “எனக்கு டீதான் வேணும்” என்று சொல்ல, அடுத்து ஒரு பளார்!

இதையெல்லாம் சகித்துக்கொண்டிருந்த பில் மாஸ்டர் சீட்டிலிருந்து எழுந்து வந்து, அந்த நா.வ. ஆசாமியிடம் “சார் இவன் உங்க பிள்ளைங்களா” என்று சந்தேகத்துடன் கேட்டான்! “ஆமா சார்! இவன் என் பிள்ளைதான்”!

”அப்புறம் எதுக்கு சார் அவனை போட்டு அனாவசியமா அடிக்கிறீங்க” என்று பில் போடுபவர் கேட்டார்!

“நான் இப்படி சின்ன வயசுல எங்கப்பன் கிட்டே அடி வாங்கினப்போ நீங்க எங்கே போயிருந்தீங்க?”! சாட்டையடி போல நா. வ. ஆசாமி கேட்டதற்கு பில் மாஸ்டரிடம் பதில் இல்லை!

------------------------------------