Monday, November 19, 2007

தி. நகர்.

நாங்கள் தி. நகரில் வாழ்ந்த காலம் மறக்க முடியாத ஒன்று. ஹார்ட் டிஸ்க்கில் போட்டு வைத்த ஒரு ஃபைல் காலம் காலமாக அழியாமல் இருக்கும். ஆனால் என் தி. நகர் வாழ்க்கை என்னுடய Heart Disk'ல் போட்டு வைத்தது, எப்படி போகும் என்று சொல்லுங்கள்? அதுவும் என் மூன்று வயதில் இருந்து பன்னிரண்டு வயது வரை நடந்த சம்பவங்கள் என் மனதிலேயே நிற்கிறது.

நாங்கள் குடியிருந்த இடம், ஒரு பெரிய வீட்டின் பின்புறம் இருந்த நான்கு குட்டி போர்ஷன்களில் ஒன்று. அந்த 'பெரிய வீடு' (நிஜமாகவே பெரிய வீடுதான அது) இருந்த இடம், பனகல் பார்க்கின் எதிர்ப்புறம். சந்தேகமாக இருந்தால், 'சரவணா ஸ்டோர்ஸின்' பிரம்மாண்டமான கடைக்குப் போய் பாருங்கள். அது இருந்த இடம்தான் அந்த 'பெரிய வீடு'.

Anyway, அந்த நான்கு போர்ஷன்களில், நாங்கள், மற்றும் மாடி வீட்டில் இருந்த பேச்சிலர் மாமாதான் தமிழர்கள். மற்ற இரு போர்ஷன்கள் மற்றும் 'பெரிய வீட்டுக்காரர்கள்' எல்லாரும் மார்வடிகள்.. மார்வாடிகள் என்றால், சினிமாவில் வருகிற மாதிரியான "நிம்பள்க்கி நம்பள்"என்று பேசுவார்கள் என்று நினைக்காதீர்கள்.. நன்றாக பக்கா தமிழில் பேசுவார்கள். ஒரு சிலர் தமிழ் தினசரிகளான 'தினத்தந்தி', 'தினமணி' போன்ற பத்திரிக்கைகளை படித்து விட்டு தமிழ்நாட்டு அரசியலை தமிழில் ஒரு பதம் பார்ப்பார்கள்.

எனக்கு எதிர் வீட்டு போர்ஷனில் குடியிருந்த டிங்கு தான் என் age group-ஐ சேர்ந்தவன்.. மற்ற எல்லோரும் என்னை விட பெரியவர்கள்.ஆனால், அந்த டிங்கு என்னை விட சரியான மக்கு.. விளையாட்டிலும் சரி, படிப்பிலும் சரி.. அதனால் என்னை நெருங்குவதற்க்கே அலறுவான். மற்ற பசங்கள் எல்லாரும் சராசரி தான் என்பதால், வெறும் பேச்சோடு சரி.. அவர்களிடம் பேசிப்பேசியே எனக்கு மார்வாடி பாஷையும் ஹிந்தியும் நன்றாக பேசத் தெரிந்தது, அந்த வயதில். என் அப்பா கூட திட்டுவார். "ஏண்டா எப்பவும் ஹிந்தியிலேயே பேசறே எப்பவும்? தமிழிலே பேசு" என்று.. ஏனென்றால், பாவம் அவருக்கு மார்வாடி பாஷையும் ஹிந்தியும் புரியாது!! அதுவும், ஹிந்தியும் மார்வாடி பாஷையும் ஒன்றுதான் என்று நினைத்துக்கொண்டிருந்தார் சாகும்வரை!

இந்த கதியில், எனக்கு இருந்த ஒரே நண்பன் அல்லது எனக்கு இன்ஸ்பைரேஷனாக வந்தவன், பப்லூ என்ற 'பெரிய வீட்டுக்கார' பையன். அவன் என்னை விட ஐந்து அல்லது ஆறு வயது இருக்கும். பெரும் பணக்காரன் என்ற பந்தா சற்றும் இல்லாதவன்.. சில சமயங்களில் எங்கள் வீட்டிற்க்கு வந்து ரசம் குடித்து விட்டு போவான் (அது அவன் அம்மாவிற்க்கோ அல்லது அப்பாவிற்க்கோ தெரிந்து இருந்தால் அவனை கொலை கூட செய்து இருப்பார்கள்).

அவனுக்கு எப்படியோ நான் நன்றாக படிப்பது தெரிந்து விட்டது (என் அக்கா அல்லது என் அம்மா, இருவரில் ஒருவர் தான் என்னைப் பற்றிபோட்டுக்கொடுது இருக்க வேண்டும்). அதில் இருந்து, Quarterly/Half-yearly/Annual எக்ஸாம் சமயங்களில் அவ்வப்போது வந்து விசாரித்து விட்டுப்போவான், நான் படிக்கிறேனா இல்லையா என்று! இதெல்லாம் போதாது என்றும, ஸ்ம்மர் ஹாலிடேக்களில் காலை ஏழு மணிக்கெல்லாம் என்னை எழுப்பி, கிரிக்கெட் கற்று கொடுப்பான். எப்படி?

அவன் இருந்த 'பெரிய' வீட்டைச்சுற்றி கான்கிரீட் ஸ்லாப்கள் போடப்பட்டிருக்கும். அதில் ஸ்டம்ப் நடுவதற்க்கு ஏற்றவாறு மூன்று குழிகளை தோண்டி, ஸ்டம்பை நட்டு, க்ரீஸை சுற்றி கார்ப்பெட் போட்டு, எனக்கு பவுலிங் சொல்லி கொடுப்பான். நானும் சளைக்காமல்பவுலிங் போடுவேன். அவனுக்கு ஒரு Profession Cricket Coach சொல்லி கொடுத்த Technique எல்லாம் எனக்கும் சொல்லி கொடுப்பான்.முதல் இரண்டு பந்துகள் Out Swing. அடுத்த இரண்டு பந்துகள் In Swing. ஐந்தாவது பந்து Straight Ball. ஆறாவது பந்து எனக்கு இஷ்டப்படியான வகை. நம்புங்கள், நான் எட்டாவது படிக்கும்போது, நான் படித்த ராமகிருஷ்ணா மிஷன் ஹை ஸ்கூலில் மீடியம் பேஸ் பவுலராக செலக்ட் ஆனேன். (ராமகிருஷ்ணா பள்ளிகளில் இருக்கும் பாலிடிக்ஸ் பற்றி ஒரு புத்தகம் போட்டு சுஜாதாவை ஒரு முன்னுரை போடச்சொன்னால், டக்கராக விற்பனை ஆகும். குமுதத்தில் வரும் 'நீங்களும் பணம் பண்ணலாம்' பகுதியில் ஃபோட்டோ கூட வரும்.).

இதெல்லாம் போதாது என்று, மத்தியானம் லன்ச் முடித்த பிறகு, அவனுக்கு என்று இருக்கும் ஒரு பெரிய அறையில் (கெஸ்ட் ஹவுஸ் என்றே சொல்லலாம்) எனக்கு ராபின்சன் க்ரூஸோ, டாம் சாயர், போன்ற புத்தகங்களை படிக்க வைப்பான். இல்லாவிட்டால், 'Do it Yourself Electronic Gadgets' போன்ற ஐட்டங்களை வைத்துக் கொண்டு, ரேடியோ அல்லது டெலிபோன் அல்லது இரயில் கிராஸ்ஸிங் சர்க்யூட் அல்லது இண்ட்க்ஷன் மோட்டார் போன்றவைகளை 'படங்களை பார்த்து செய்' என்பான். மொத்தத்தில், என்னுடய இரண்டு மூன்று Annual Leave-களை உருப்படியாக கடக்க வைத்தான்.

அவன் சொல்லிக்கொடுத்ததில் எல்லாவற்றையும் விட்டு விட்டு Electronic Gadjets-களை மட்டும் பிடித்துக் கொண்டுவிட்டேன். இப்போது பார்த்தீர்களானால், என் வீடு ஒரு சிறிய எலக்ட்ரானிக் கடை போல இருக்கும். அதற்கு இன்ஸ்பைரேஷன் அந்த பப்லூதான்.

அதற்க்குப் பிறகு, என்னுடைய பன்னிரண்டாவது வயதில், தி. நகரில் இருந்து நங்கநல்லூருக்கு குடி போனோம். அப்படி போகும் முன், என்னிடம், டெலிபோன் ரிசீவர்கள் ரெண்டு (பழைய காலத்து பீங்கான் ரிசீவர்கள்), நான்கைந்து டெலிபோன் வயர்கள், D.C. மோட்டார்கள் இரண்டு என்று
பல ஐட்டங்களை கொடுத்து அனுப்பினான். அதெல்லாம், நாலைந்து வருடங்கள் வைத்துருந்து அப்பா திட்டியதால் குப்பையில் போட்டேன்.
பல வருடங்கள் கழித்து, அவனை ஒருமுறை சந்தித்தேன் (ஒரு கல்யாணத்தில் என்று நினைவு). நான் என்ன படிக்கிறேன், எங்கு படிக்கிறேன்,எப்படி படிக்கிறேன் என்று விசாரித்தான். நான் அவனிடம் கேட்டேன் எங்கு படிக்கிறான் என்று! அதற்கு அவன், தான் B.Com. படித்து விட்டுகுடும்ப Business-ஐ கவனிப்பதாகவும் சொன்னான். எனக்கு ஷாக்.. என்னை நன்றாக படிக்க சொல்வானே, அவன் போய் பி. காம்.உடன் நிறுத்தி விட்டானே என்று.. அப்போதுதான் எனக்கும் தோன்றியது. அவன் எப்படி படிப்பான் என்று நான் அவனிடம் கேட்டதும் இல்லை, அவனும் சொன்னது இல்லை. So, எனக்குள் ஒரு Obvious கேள்வி... அதையும் அவனிடம் கேட்டேன். "அடப்பாவி... என்னை படி, படின்னு போட்டுஉசிரை வாங்குவே... நீ மட்டும் பி.காமுடன் நிறுத்திவிட்டாயா?". அதற்கு அவன் சொன்னான்.. "நான் ஒழுங்கா படிக்கல.. நீயாவது நல்லா படிக்கணும்னுதான் அப்படி செஞ்சேன்".. அதை கேட்டு, நான் கல்லாய் சமைந்தேன். ஒரு சில நிமிஷங்களுக்கு.

இப்போது அவன் தனியாக Business செய்வதாகவும், தன் தாய் தந்தையரை விட்டு பிரிந்து விட்டதாகவும் (அவர்கள் community-இல் அதுநடக்க முடியாத ஒன்று. ஜார்ஜ் புஷ் இங்கிலீஷ் வார்த்தைகளை ஒழுங்காக pronounce செய்வது போன்ற ஒன்று) கேள்விப்பட்டேன். அவனைப் பார்த்தால் ஒன்று கேட்கவேண்டும்.. "எங்களுக்காக பல முறை உன் அப்பா அம்மாவிடம் அடி வாங்கினாயாமே நீ?"