Thursday, July 23, 2009

மாத்தி யோசிங்க ஸார்!

இந்த வார துக்ளக்கில் வந்த சத்யாவின் நக்கல் கட்டுரை! அதை அப்படியே வெளியிடுகிறேன்!

நன்றி: துக்ளக்


இது போராட்ட சீஸனோ என்னவோ, பால் உற்பத்தியாளர்களில் தொடங்கி பல்வேறு தரப்பினரும் அரசுக்கு எதிராகப் போராடத் தொடங்கியுள்ளனர். ‘எந்தப் போராட்டமும் நியாயமல்ல’ என்ற உணர்வோடுதான், போராட்டக்காரர்களுக்கு அரசு பதில் சொல்லிக்கொண்டிருக்கிறது. அதற்காக நமது முதல்வர், அவர்களுக்கெல்லாம் எதிரானவர் என்று முடிவு கட்டி விடுவது நியாயமல்ல. கலைஞரின் போதாத நேரம், இப்போது அவர் முதல்வராக இருக்கிறார். அதனால்தான், போராடுபவர்களுக்கு எதிரான நிலையை எடுக்க வேண்டியிருக்கிறது. இப்போது நடப்பது மட்டும் ஜெயலலிதாவின் ஆட்சியாக இருந்தால், போராட்டக்காரர்களை ஆதரித்து அவர் எப்படியெல்லாம் வாதாடியிருப்பார் என்று யோசித்துப் பார்த்தால்தான் உண்மையைப் புரிந்துகொள்ள முடியும். அதற்காகத்தான் இப்படி மாற்றி யோசிக்கிறோம்.

உடன்பிறப்பே,

இன்றைய தினம் சத்துணவுப் பணியாளர்களில் தொடங்கி சகல தரப்பினரும் அம்மையாரின் ஆட்சிக்கு எதிராகப் போராடும் அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அம்மையார் ஆட்சிக்கு வந்தாலே அக்கிரமங்கள் அணி வகுக்கும் என்பதை அறிந்திருந்தும், நன்றி கெட்ட தமிழன் சிந்திக்கும் அறிவை இழந்து, அவரை ஆட்சியில் அமர்த்தியதன் விளைவுதான் அடுக்கடுக்கானப் போராட்டங்கள்.

இன்றைய தினம் போராடுபவர்கள் யார்? மிட்டா மிராசுதாரர்களா? உன்னைப்போல் கோடிகளில் புரளும் கோமான்களா? உன்னுடைய ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசிகள் உயர்ந்து விட்டதால், வறுமையை எதிர்த்து வாழ வழி தெரியாமல் வாடிக்கொண்டிருக்கும் கையினர்தானே? உழைப்புக்கேற்ற ஊதியத்தைக் கேட்கக் கூட உரிமையில்லையா, இந்த உன்மத்தர்களின் ஆட்சியில்?

‘நான் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் போராடுகிறார்களே’ என்று ஒரு அங்கலாய்ப்பு வேறு. போராடாமல் என்ன செய்வார்கள்? அந்த லட்சணத்தில்தானே இருக்கிறது உன் ஆட்சி? உன் ஆட்சியில் போராடும் நிலை இருப்பது அவர்கள் குற்றமா? ‘போராடினால் பொதுமக்களின் ஆதரவு கிடைக்காது’ என்று சட்டமன்றத்திலேயே சாபமிடுகிறார் சண்டித்தனமாக. போராடுபவர்களும் பொதுமக்களின் அங்கம்தான் என்ற அடிப்படை அறிவைக் கூட இழந்து விடுகிற அளவுக்கு, ஆணவம் கண்ணை மறைக்கிறது ஆட்சியாளர்களுக்கு.

அப்படி என்ன கேட்டு விட்டார்கள் அப்பாவிப் போராட்டக்காரர்கள்? பால் உற்பத்தி விலை பாதாளத்தில் இருக்கிறது என்று பலமுறை முறையிட்டும் பலனில்லை. அதை உயர்த்திக் கொடுங்கள் என்று உருக்கமாகக் கேட்டும் உதவ முன்வரவில்லை இந்த உதவாக்கரை சர்க்கார். பாடுபட்டு உழைக்கும் பால் வியாபாரிகள் மீது பரிதாபப்படாமல் பாய்ச்சல் காட்டுவது ஏன்? பருப்பு விலைகூட இன்றைய தினம் கிலோ ரூ.100 என்ற அளவில் விற்கப்படுகிறதே, இந்தப் படுபாவிகளின் ஆட்சியில். பருப்புக்கு ஒரு நீதி. பாலுக்கு ஒரு நீதியா? உற்பத்தி விலையை உயர்த்திக் கொடுக்காமல் அவர்களை உதாசீனப்படுத்துவது ஏன்?

பரிதவிக்கும் பால் உற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்த பாலை நடுத்தெருவில் கொட்டியது பாபமா? ‘ரத்தத்தைக் கண்டே பயப்படாத நான், பாலைக் கண்டா பயப்படுவேன்?’ என்று பரிகசிப்பது முறையா? எந்த அளவுக்கு மனம் நொந்திருந்தால், அவர்கள் பாலைக் கொட்டியிருப்பார்கள் என்று எண்ணிப் பார்க்காமல் ஏகடியம் செய்கிறார் எதேச்சாதிகார முதல்வர்.
அவல நிலையில் இருக்கும் அங்கன்வாடி ஊழியர்களும், சற்றொப்ப சாகும் நிலையை எட்டிவிட்ட சத்துணவுப் பணியாளர்களும் தங்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் கோபம் கொள்வது ஏன் கோமாளி ஆட்சி நடத்தும் இந்த கொடுங்கோல் அரசு? இதற்குக்கூட நிதி இல்லையா, இந்த நீலிக்கார ஆட்சியில்? பாராட்டு விழாக்களுக்கும், படப் பிடிப்பு நிகழ்ச்சிகளுக்கும் செலவிடும் பல கோடி ரூபாய் பணத்தில் ஒரு பகுதியை ஒதுக்கினாலே போதுமே. ஏன் மனம் வரவில்லை இந்த மாய்மால அரசுக்கு?

போராட்டக்காரர்கள் உத்தமர் காந்தி வழியில் உண்ணாவிரதம் இருக்க முன்வந்தால் கூட, ‘போட்டி உண்ணாவிரதம் இருக்க எனக்கும் தெரியும்’ என்று எள்ளி நகையாடுவதும், எடுத்தெறிந்து பேசுவதும் எத்தனை நாளைக்கு எடுபடும்? எம் தமிழர்கள் என்ன அவ்வளவு ஏமாளிகளா? ‘லட்சம் பேரில் ஏழாயிரம் பேர்தானே போராடுகிறார்கள்’ என்று அற்ப மகிழ்ச்சி அடைகிறார் அகங்காரம் பிடித்த முதல்வர். அத்துணைபேருக்கும் அடையாளமாகத்தான், அந்த ஏழாயிரம் பேர் அணி வகுத்திருக்கிறார்கள் என்பதைக் கூட அறியாமல் அரைவேக்காட்டுத்தனமாக, அரற்றுகிறார்.

முன்பு ஆட்சியில் இருந்தபோது ஊதியத்தை உயர்த்தினேனே, நன்றி இல்லையே என்று அங்கலாய்ப்பதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்? உன்னுடைய சொந்தப் பணத்தையா கொடுத்தாய்? அரசுப் பணத்தை அரசு பணியாளர்களுக்குக் கொடுப்பதற்கு, உனக்கு எதற்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கேட்கத் தெரியாதா நமக்கு?

சகலருக்கும் சமச்சீர் கல்வி என்ற சாதாரணமான கோரிக்கையைக் கூட ஏற்று ஆணை வழங்க வழியில்லை இந்த வக்கற்ற ஆட்சியில். பள்ளிக்கூடங்களில் நன்கொடை என்ற பகற் கொள்ளையில் பங்கு கிடைக்கிறது என்பதால்தான், பதவியில் இருப்போர் அதைப் பார்த்தும் பாராமுகமாக இருக்கிறார்கள் – என்பது பலரும் அறிந்ததுதான். அந்தக் கொள்ளைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கொடி பிடித்து வந்த மாணவர்களை தடி கொண்டு தாக்கி, குருதி வெள்ளத்தில் தள்ளி, குறுக்கு சால் ஓட்டியது ஏன் இந்தக் குணம் கெட்ட ஆட்சி?

எந்தப் போராட்டத்திற்கும் விதி உள்ளது என்று விந்தையாக வியாக்கியானம் செய்கிறார் விவஸ்தை கெட்ட முதல்வர். விலாநோகச் சிரிக்க மாட்டார்களா விபரம் அறிந்தோர்? அனுமதி இல்லாமல் நுழைந்துவிட்டார்கள் என்று அறிக்கை விடுகின்றனர் ஆட்சியாளர்கள். அனுமதிக்க மறுத்தது யார் குற்றம்? தமிழகத் தலைமை செயலகத்திற்குள் நுழைய தமிழன் அனுமதி வாங்க வேண்டும் என்ற ஆணவ அரசியலைக் கூட எந்த ஏடும் கண்டிக்கவில்லை. அவ்வளவு அச்சம் ஆள்வோரிடம்.

அன்றாடம் ஆட்டோ ஓட்டி அல்லல்படும் அடிமட்டத் தொழிலாளர்கள் பெரும் சுமையான பெட்ரோல், டீஸல் விலை உயர்வைத் தாங்க முடியாமல் தவிக்கின்றனர். அவற்றை மான்ய விலையில் வழங்கும்படி மன்றாடுவது மாபெரும் குற்றமா? அதைக் கூடச் செய்யத் தயங்குவது ஏன் இந்த தரம் கெட்ட அரசு? அவர்களை அழைத்துப் பேச மறுத்து அழிச்சாட்டியம் செய்வது ஏன்? பெட்ரோலியத்துறை அமைச்சரோடு பேசுவதற்கு நேரம் இருக்கிறது. ஆட்டோ ஓட்டுநர்களை அழைத்துப் பேச அவகாசம் இல்லையா? உன்னுடைய கூட்டணி ஆட்சிதானே நடைபெறுகிறது மத்தியில்? பெட்ரோல், டீஸல் விலையை உயர்த்தக்கூடாது என்று நீ தடுத்து நிறுத்தியிருந்தால், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இந்த அவல நிலை ஏற்பட்டிருக்குமா?

தேர்தல்தான் முடிந்து விட்டதே – இனி நம்மை ஆட்சியிலிருந்து அகற்ற யாரால் முடியும் என்ற அகந்தைதானே ஆட்டோ ஓட்டுனர்கள் அலட்சியப்படுத்தப்படுவதற்குக் காரணம்? சொகுசு பஸ்கள், எக்ஸ்பிரஸ் பஸ்கள் என்ற பெயரில் மறைமுகமாக பஸ் கட்டணத்தை உன் அரசு உயர்த்துவதைப் போல, ஆட்டோ டிரைவர்களும் சொகுசு ஆட்டோக்கள், எக்ஸ்பிரஸ் ஆட்டோக்களை ஓட்டி கட்டணத்தை உயர்த்திக்கொள்ளவாவது வழியிருக்கிறதா இந்த ஆட்சியில்? அதுவும் இல்லை! போராடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு என்னதான் வழியிருக்கிறது?

மருத்துவக்கல்லூரி பயிற்சி மாணவர்கள் உயிரைத் துச்சமாக மதித்து, மடியும் வரை உண்ணாவிரதம் தொடங்கியபின், சட்டமன்றத்தில் நம்மைப் போன்ற எதிர்க்கட்சிகள் அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததையடுத்து, வேறுவழியின்றி பணிந்து அவர்களது ஊதியத்தை ஓரளவுக்கு உயர்த்தி இருக்கிறது இந்த அரசு. இந்த அறிவு ஏன் முதலிலேயே இல்லாமல் போய் விட்டது?

இளைஞர்களின் இன்னுயிருக்கு இன்னல் விளைவிப்பதில் அப்படியென்ன இன்பம் இந்த இரக்கமற்ற அரசுக்கு? போராட்டங்களை எதிர்க்கட்சிகள்தான் தூண்டிவிடுகின்றன என்று ஒரு புலம்பல். உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்பது அண்ணா கண்டெடுத்தக் கொள்கை. அது தவறு என்றால் அந்தத் தவறைத் தொடர்ந்து செய்ய தயங்க மாட்டான் இந்தக் கருணாநிதி. போராட்டங்களை நடத்துவதும், ஆதரிப்பதும் எனக்குப் புதிதல்ல. என் வாழ்க்கையே போராட்டம்தான்.

ஆட்சியில் இருப்போரின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து, மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தொடை நடுங்கிப் போய், தாங்கள் தொடங்கிய போராட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டதில் நமக்கு எந்தவித அட்டியுமில்லை.
ஆனால், உடன்பிறப்பே, என் னுடைய ஆட்சியாக இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா? நான் எப்போதாவது இப்படியெல்லாம் காட்டாட்சி நடத்தியிருக்கிறேனா? வேண்டுமா இப்படியொரு வெட்கக்கேடான ஆட்சி? அப்புறப்படுத்த வேண்டாமா இந்த ஆணவம் பிடித்த அரசை? சிந்தித்துச் செயல்படு.

அன்புள்ள,
மு.க.