சமீபத்தில் (அதாகப்பட்டது 2008’ல்) நான் பதிந்த “கமலில் வைராக்கியம்” பற்றி சில பேர் மேலும் எழுதச்சொன்னதால், என் மாமனாரின் அனுபவங்களை மேலும் சொ(கொ)ல்கிறேன்!
பிந்தைய பின்னூட்டத்தில் நான் குறிப்பிட்டதுபோல என் மாமனார் எழுபதுகளின் கடைசியிலும் எண்பதுகளின் ஆரம்பங்களில் பல படங்களில் நடித்திருகிறார் (”நிறுத்துங்க இந்த சடங்கை” என்று ஹீரொ உடம்பு முழுதும் ரத்தகாயங்களுடன் நொண்டிக்கொண்டு வரும்போது, “இந்த சம்பந்தமே வேண்டாம் வாடா” என்று இதற்கேன்றே இருக்கும் ராஜக்களின் / சூரியகுமார்களின் / அப்பாஸ்களின் அப்பாவாக வருவார்வகளே!! அந்த மாதிரி ரோல்கள்! இல்லை சில சினிமாக்களின் டாக்டராக வந்து ஹீரோவின் அம்மாவுக்கோ அல்லது அப்பாவுக்கோ ஊசி போடும் ரோல்கள்!)! இப்படி சின்னச்சின்ன வேடங்களில் நடித்ததால் அவர் பலபெரிய ஹீரோக்களுடன் நடித்துவிட்டார்! கமல், ரஜினி, சிவகுமார், லக்ஷ்மி, சரிதா போன்றவர்களுடன்!
ரஜினியின் ஆரம்ப காலத்தில் (79/80/81/82) அவருடன் சில படங்கள் செய்திருக்கிறார்! ரஜினி தனக்கு ஷாட் இல்லை என்று தெரிந்தால் செட்டை விட்டு போகமாட்டாராம்! அங்கேயே எங்காவது ஓரமாகபடுத்துவிடுவாராம்! அப்படித்தான் சிவப்பு சூரியன் படத்தில் நடிக்கும்போது செட்டின் ஓரத்தில் தூங்க்கிய ரஜினியை ஒரு லைட் பாய் ரஜினி என்று தெரியாமல் ஒரு உதை விட்டு “எழுந்துருடா! வேலை நேரத்துலஎன்ன தூக்கம்?” என்று சக லைட்பாய் என்று நினைத்து திட்டினாராம்! நம்ம ரஜினிக்கா கோபம் வரும்! சாரி என்று சொல்லிவிட்டு வேறு இடத்தில் போய் தூங்கிவிட்டாராம்!
அதே போல, இன்னொரு சமயம், ஒரு ஷாட்டில் ரஜினி ஜீப்பை வேகமாக ஓட்டிவிட்டு நிறுத்தி, கடகடவென்று இறங்கி காமிராவை நோக்கி நடக்க வேண்டும்! என் மாமனாருக்கு கழுத்தில் ஒரு நரம்பு பிசகி இருக்கும்!(ஒரு ஆர்ட் ஃபிலிமில் நடிக்கப் போய் வந்த வினை இது! அப்புறம் சொல்கிறேன்!) அதனால் வேகமாக கழுத்தை திருப்ப முடியாது! பல டேக்குகளில் ரஜினி ஜீப்பை விட்டு என் மாமனாரை விட வேகமாக போய்விடுவாராம்! ரஜினியின் வேகத்தைப் பார்த்த என் மாமனார் “வேணும்னா ரஜினிய வெச்சு தனியா ஷாட் எடுத்துக்குங்க” என்று டைரக்டரிடம் சொல்லியிருக்கிறார்! ஆனால் ரஜினி, அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, அடுத்த டேக்கில் என் மாமனார் ஜீப்பை விட்டு இறங்கும்வரை வெயிட் செய்துவிட்டு அப்புறம் ஒரு மாதிரி சேர்ந்தார்போல நடந்து டேக்கை ஓக்கே செய்தாராம்!
செட்டில் ரஜினி சீனியர்களுக்கு கொடுக்கும் மரியாதையைப் பற்றி விலாவாரியாக சொல்வார் என் மாமனார்!
இதில் கூத்து என்னவென்றால், சத்யராஜும் அப்போது ஜூனியர் ஆர்டிஸ்ட் தான்! பிரேக்கின் போதெல்லாம் அவர் என் மாமனாரிடம் “இப்படி ரஜினி கமல் கிட்டே அடி வாங்குற மாதிரி நடிச்சே என் கேரியர் போயிடப்போகுது!” என்று புலம்புவாராம்!
1 comment:
சுவராசியமான அனுபவங்கள். தொடருங்கள்.
Post a Comment